Articles

தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை என்ன செய்வது?

முஹம்மத் பகீஹுத்தீன்


நாட்டில் போதைப் பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போதைப் பொருள் வியாபாரமும் பயங்கரமான முறையில் வியாபித்துள்ளது. கடந்த 23.02.2019 அன்று கொள்ளுப்படியில் உள்ள ஒரு சந்தையில் 294 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே. எனவே அரசும் சிவில் சமூக நிறுவனங்களும் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.


இந்நிலையில் ஹராமான வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை சட்டபூர்வமாக மாற்றும் செயற்பாடு குறித்து இஸ்லாமிய பார்வை என்ன? மேலும் தவறான வழியில் சம்பாதித்த அந்த சொத்துக்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் இந்த ஆக்கம் விடை தேடுகிறது.


போதை பொருள் வியாபாரத்தால் ஈட்டப்படும் இலாபங்கள், விபச்சார வணிகத்தால் கிடைக்கும் வருமானங்கள், திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள், இலஞ்ச, ஊழல் வழிகளில் வந்த பணங்கள், சூதாட்டத்தின் மூலம் கிடைத்த பணங்கள், கடத்தப்பட்ட பணங்கள், கள்ள நோட்டுக்கள் போன்ற சட்ட விரோத பணங்களை கருப்புப் பணத்திற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.


பணச் சலவை என்றால் என்ன?


கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதே பணச் சலவையாகும். உண்மையில் பணச் சலவை நடவடிக்கை என்பது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கருப்புப் பணத்தை அது எப்படி கைக்குவந்தது என்ற அடிப்படையை மூடிமறைத்து விட்டு நியாமான சட்ட அந்தஸ்தை அதற்கு வழங்குவதே பணச் சலவையாகும்.


பணச் சலவைக்கான நோக்கங்கள்:


சட்டவிரோதமாக பெற்ற கருப்புப் பணத்திற்கு முறையான சட்ட உரிமை பண்பை வழங்குவதும், பணத்தாசை காரணமாக அதனை திரட்டும் வழியில் பல குற்றச் செயல்களை செய்து விட்டு சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தன் கைங்கரியத்தின் தடயங்களையும் ஆதாரங்களையும் மறைப்பதும் பணச் சலவையின் பிரதான இலக்குகளாகும்.


பணச் சலவைக்கான வழிமுறைகள்:


கருப்புப் பணங்களை வெள்ளையாக்கும் சலவை வழிமுறைகள் பல உண்டு. உதாரணமாக அப்பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தல் அல்லது காணி பூமிகளை வாங்குதல் அல்லது வியாபார நடவடிக்கைகளில் மற்றும் உண்மையான அல்லது போலியான முதலீட்டு திட்டங்களில் கரைத்து விடுதல் அல்லது உறவினர்களின் பெயரில் உரிமம் கொடுத்து எழுதிவைத்தல் போன்ற பல வழிகளில் சலவை செய்யலாம்.


பணச் சலவை தடுப்புச் சட்டம்;


பொதுவாக அனைத்து நாடுகளிலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பணச் சலவை நடவடிக்கைகள் யாவும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஓவ்வொரு நாடுகளிலும் பணச் சலவை தடுப்புச் சட்டம் இருப்பது போன்றே இத்துறை சார்ந்த ஆய்பு, தேடல் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. உலகலாவிய ரீதியில் பணச் சலவை முயற்சிகளை தடுப்பதற்கும்; கட்டுப்படுத்துவதற்கும் சர்வதே சட்ட ஒழுங்குகளும் ஒப்பந்தங்களும் அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இஸ்லாத்தின் நிலைப்பாடு:


பணச் சலவை குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிலவும் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அங்கீகரிக்கும் நிலைப்பாடாகவே உள்ளது. ஆனால் குறித்த விவகாரம் தொடர்பாக இஸ்லாம் ஏற்கனவே அது தடுக்கப்பட்ட பணப் பரிமாற்ற முறை எனவும் அது வெறுக்கத்தக்க ஒரு குற்றச் செயல் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படும் பணம் எப்பொழுதும் எந்த நிலையிலும் ஹராமான பணமாகவே இருக்கும். அதன் பெயர்கள், வடிவங்கள், நிலைமைகள், இடங்கள் எப்படி மாறி மாறி வந்தாலும் ஹராம் என்ற வட்டத்திலிருந்து வெளியேறாது.


ஆரம்ப காலத்தில் பணச் சலவைக்கான வழிமுறைகள்:


ஆரம்ப காலங்களில் சில கபடக்காரர்கள் கொள்ளையடித்த பணத்தை தமது உடமையாக்கிக் கொள்வதற்கு பொய் சாட்சிகளையும் போலி ஆவனங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்து அதனை சட்டபூர்வமாக்கி விடுவார்கள். இது பழைய கால பணச் சலவை முறைவழியாகும்.


சில வேலைகளில் துய்மையான ஒரு நீதிபதி கூட வெளிப்படையான ஆதாரங்களை வைத்து போலிகளுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கலாம். இன்னும் சில சுயநல நீதிபதிகள் அறிந்து கொண்டே அநீதிக்கு துணைபோகும் கபடக்காரனின் மோசடிக்கு உடந்தையாக இருப்பர்.


எனவே ஆரம்ப புகஹாக்கள் 'நீதிபதியின் தீர்ப்பு ஒருபோதும் ஹராத்தை ஹலாலாக்கவோ அல்லது ஹலாலை ஹராமாக்கவோ மாட்டாது' என பத்வா வழங்கியுள்ளனர். வெளிப்படையான சான்றுகளின் அடிப்படையில் தான் அந்த தீர்ப்பு இருக்குமே தவிர அல்லாஹ் ஹராமாக்கியது ஹலாலாக மாட்டாது. மறுமையில் அதற்கான உண்மையான தீர்ப்பை அல்லாஹ் அவனுக்கு வழங்குவான்.


அந்த வகையில் தவறான வழிமுறைகள் மூலம் கிடைத்த கருப்புப் பணத்தை சலவை வழிமுறைகளை பயன்படுத்தி பெற்றுக் கொண்ட வங்கி, அல்லது காணி பூமி, வர்த்தக, முதலீட்டு பதிவுப் பத்திரங்கள் மற்றும்; உரிமங்கள் யாவும் ஹராமானதாகவே இருக்கும். வெளிப்படையான சான்றுகளை வைத்து வழங்கும் நீதிபதியின் தீர்ப்பு ஹராம் என்ற அழுக்கை ஒருபோதும் சலவை செய்யாது.


அவ்வாறே பணச் சலவையில் ஈடுபடும் ஒரு மனிதன் இரண்டு குற்றங்களை புரிகின்றான். ஒன்று சட்டவிரோதமாக அந்த பணத்தை சம்பாதித்தது. இரண்டு ஹராமான பணத்தை ஹலால் நிலைக்கு மாற்றும் நோக்கில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது. மனித சட்டங்கள் பணச் சலவை குறித்து எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதே. அந்த நிலைப்பாட்டுக்கு கிஞ்சித்தும் முரண்படாத நிலைப்பாட்டையே இஸ்லாம் வழங்கியுள்ளது.


தவறாக ஈட்டிய சொத்திலுந்து பரிசுத்தம் அடைபவது எவ்வாறு?


சட்டத்துக்கு புறம்பாக ஈட்டிய அனைத்து சொத்துக்களும் ஹராம் என்பது தெளிவானது. கருப்புப் பணத்தால் சம்பாதித்த சொத்துக்களை வைத்திருப்பது தொடர் பாவமாகவே அமையும். அதிலிருந்து நீங்குவதற்கான வழிமுறைகளை இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.


தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்கள் ஹராம் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அதனை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றை தேவையுடையோருக்கு அல்லது நற்பணிகளுக்காக அல்லது சமூக நலப்பணிகள் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து விடுவதே உசிதமானது என அபிப்பிராயப்பட்டுள்ளார்கள்.
இது ஒருபோதும் தர்மம் ஆகாது. மாறாக தனக்கு சொந்தமில்லாத ஒரு சொத்தை விட்டும் நீங்குவதற்கான முறையான ஒரு வழியாகும்.

ஒரு முறை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சுட்ட ஆட்டிறைச்சி கொடுக்கப்பட்டபோது அது ஹராமானது என தெரிய வந்தது. உடனே அதனை கைதிகளுக்கு கொடுத்து விடுங்கள் என பணித்தார்கள். (அஹ்மத் - ஸஹீஹ் அல்பானி 754)


தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை தேவையுடையவர்களுக்கோ நற்பணிகளுக்கோ வழங்குவதன் மூலம் இரண்டு வகையான நன்மைகள் கிடைக்கின்றன.
ஒன்று : ஹராமான சொத்தை விட்டும் தூய்மை பெற வேண்டும் என்ற மனோநிலையும் தான் அந்த சொத்துக்களை எந்த நிலையிலும் அணுபவிக்கக் கூடாது என்ற மனமும் இறை கூலியை பெற்றுத்தர போதுமானதாகும்.


இரண்டு : ஒரு சொத்து வீணாகமல் பயன் பெறுவதற்கு உடந்தையாக இருந்தான் என்ற வகையில் அவனுக்கு கூலி உண்டு. 'யார் அணுவளவேனும் நன்மை செய்கிறாறோ அதன் பிரதிபலனை நாளை மறுமையில் கண்டு கொள்வான்'
தூய்மையாக உழைப்போம் ஹலாலாக சாப்பிடுவோம். அசுத்தமான சொத்துக்களை அப்புறப்படுத்துவோம். கோடி கோடியாக அது இருந்தாலும் அதனை விட்டும் நீங்குவதே தௌபாவாகும்.10-05-2019PMNOWEB

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.