புத்தகம் ஒரு வழிகாட்டி!
துடுப்பதி ரகுநாதன்.🦚🦚🦚🦚🦚🦚
நான்காக ஒரு சாலை பிரிந்திருக்கும் .
அங்கு ஒரு கை காட்டி மரம் நான்கு திசைகளையும் காட்டிக் கொண்டு நிற்கும்!
இந்த திசையில் போனால் இந்த ஊருக்குப் போகலாம்.
இந்த வழியில் போனால் அந்த ஊருக்குப் போகலாம் என்று நமக்கு நான்கு திசைகளில் எங்கு, எங்கு போக முடியும் என்று நமக்கு வழி காட்டும்!
அது ஒரு தகவல் பலகை!
நமக்கு வழி காட்டுவது தான் அதன் வேலை!
அதே நம்மை அங்கு கூட்டிக்கொண்டு போய் விடாது!
அது போல் தான் புத்தகமும்!
நல்ல புத்தகம் ஒரு வழி காட்டி!
அதுவும் ஒரு தகவல் பலகை தான்!
மனிதன் சுயமாக எப்படி முன்னேறுவது என்று ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டன!
பல வீடுகளில் அலமாரி நிறைய இது போன்ற புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருப்பார்கள்.
கோடீஸ்வரன் ஆவது எப்படி?
சுலபமாக தொழிலதிபர் ஆக வேண்டுமா?
ஆட்சியைப் பிடிப்பது எப்படி?
நீங்கள் டாக்டர் ஆக வேணுமா?
என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள்!
அந்தப் புத்தகங்களில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் பட்ட அனுபவங்களை....
நமக்கு வழி காட்ட எழுதி வைத்திருப்பார்கள்.
அது நிச்சயம் நமக்குப் பயன் படும்!
முதலில் நாம் அது எவ்வளவு நல்ல புத்தகமாக இருந்தாலும் நாம் அதைப் படிப்பதினால் மட்டும் ஒரு பிரயோசனமும் இல்லை!
அந்த அறிஞர்கள் சொன்ன அந்த நல்ல கருத்துகளை நாம் செயல் படுத்த தொடங்கினால் மட்டுமே....
அது நமக்கு பலன் தரும்!
அதில் சொல்லப் பட்ட வழிகளைப் பின் பற்றி அயராது அல்லும் பகலும் பாடு பட வேண்டும்.
எந்த தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும்!
கோடிஸ்வரன் ஆக வேண்டாமா? என்ற புத்தகத்தை வாங்கி...
அதைப் படித்து விட்டு அட்டை போட்டு புத்தக அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு....
பக்கத்து தெருவில் இருக்கும் ஏடிஎம் மிஷினில் போய் கார்டை சொருகி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விட முடியாது!
அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் வழி முறைகளை கடைப் பிடிப்பதற்காக உங்கள் வாழ்க்கையே நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.
ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாது! என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
அதைப் பலர் தவறாக இன்று வரை பொருள் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்க்கைக்கு உதவாது என்ற அர்த்தத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான சுரைக்காய் மட்டும் இருந்தால் பொரியலாக மாறி அது உங்கள் தட்டிற்கு வந்து விடுமா?
நிச்சயம் வராது.
அதை சுத்தம் செய்து பொடிப் பொடியாக அரிந்து அதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்தால் மட்டுமே அதை கறியாக உங்களால் சாப்பிட முடியும்!
அது போல் தான் இந்த வகை புத்தகங்களும்!
நிச்சயம் கறிக்கு உதவும்!
எப்பொழுது?
அதைப் படித்தவுடன், அதில் சொன்ன அனைத்து விஷயங்களையும், புரிந்து கொண்டு, செயல்ப் படுத்தி பாருங்கள்!
நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்!
0 Comments:
Post a Comment