Articles

நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?

இந்த நாட்டில் இஸ்லாமிய சமுகத்தின் தலைமைகளாகத் தம்மைத் தாமாகவே இனங்காட்டிக் கொண்டிருப்பவர்கள் சமுகத்தை வழிநடாத்துவதில் தோல்வி கண்டுவிட்டார்கள். மதத் தலைவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அவர்களது ஆன்மீக, மத உணர்வையும், அரசியல் தலைவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அரசியல் மற்றும் சமூகத் தேவைகளையும் மூலதனமாக்கி, பொது மக்களை உசுப்பேத்தி செய்து வந்த புரோகித, அரசியல் செயற்பாடுகள் அதன் உச்சபட்ச வங்கரோத்து நிலையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய இந்த நெருக்கடி மிகுந்த தருணத்தில் பொது மக்களாகிய நாம் உணர்ச்சிபூர்வமான உசுப்பேத்தல்களின் பின்னால் மந்தைகள் போன்று சென்று, கசாப்புக்கடைக்கு விலைபோகாதிருக்க, அல்லாஹ் மனிதனுக்கு அருளாகத் தந்த பகுத்தறிவை நன்கு பயன்படுத்த வேண்டும்.

உரிமைகள் என்றும் மார்க்கம் என்றும் அல்லாஹ் றஸுல் ஸுன்னத்து என்றெல்லாம் இவர்கள் வாய் நிறையப் பேசும் உணர்வுகளை உசுப்பேத்திவிடும் வார்த்தைகளின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு பயணிக்காது, அவற்றின் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதனை அதன் மூலவேர்களுடன் இணைத்துத் தேடியறிந்து, அவதானத்துடன் அவற்றை உள்வாங்க வேண்டும்.

உண்மையில் இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, அது வாழ்க்கைக்கான வழிகாட்டல், அது, மனிதனதும், இந்தப் பிரபஞ்சத்தினதும் இயல்புகளை கவனத்திற் கொண்ட மார்க்கம். அது நன்மை, நீதி, சமத்துவம், மனித நேயம், அன்பு... போன்ற பெறுமானங்களை, விழுமியங்களைப் போதிக்கின்றது. அவற்றை நிலை நிறுத்துவதற்கான ஒழுங்குகளாகவே அவற்றின் வணக்க வழிபாடுகள் முதல் சட்ட ஒழுங்குகள் வரை அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மனித உயிர், மானம், பகுத்தறிவு, உடமைகள், கொள்கைச் சுதந்திரம்... என நீண்டு செல்லும் இந்தப் பட்டியலில் உள்ளவற்றிற்கு உத்தரவாதம் பெற்றுக் கொடுக்கும் ஓர் ஒழுங்கை நோக்கியே இஸ்லாமிய ஷரீஆப் போதனைகள் மனிதனை வழிப்படுத்துகின்றன.

இந்தப் பின்னணியில் நின்று இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த, துன்பப்படுத்த, அவனது சக்திக்கு அப்பாற்பட்ட, அவனது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களை செய்யுமாறு எந்த இடத்திலும் ஏவவில்லை. எப்போதும் உணர்வுகளுக்கப்பால் அறிவைப் பயன்படுத்துமாறு வேதத்தில் வரிக்கு வரி அது ஏவிக் கொண்டே இருக்கின்றது. அது மனிதனை வாழ வைக்க வழி சொல்லித் தரும் மார்க்கமே அல்லாமல் அவன் மாண்டு போக வழி சொல்லும் மார்க்கமல்ல. மரணத்தையும் வாழ்வாகப் பார்க்க வழிகாட்டும் மார்க்கம் அவனை சிரமப்படுத்துவதை எந்த வகையிலும் நோக்கமாகக் கொள்ளவில்லை. சிரமங்களை நீக்குவது, சுமைகளை இல்லாமல் செய்வது, இறுதி வேதத்தின் முக்கிய இலக்கு என்று குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. எனவேதான் நபியவர்கள் “இந்த மார்க்கம் இலகுவானது, இதனை யாரும் கடினமான பாணியில் பின்பற்ற வேண்டாம். அப்படி கடினமாகப் பின்பற்ற முனைபவர்களை அது மிகைத்துவிடும் ” என குறிப்பிட்டார்கள்.

இந்த மார்க்கம் மனித வாழ்வுக்கான ஓர் அருள், அதனை, மனித வாழ்வினை அச்சுறுத்தும் ஒன்றாக இறைவன் ஒரு போதும் அமைக்கவில்லை. எனவே, இந்த மார்க்கத்தை யாராவது அப்படி மக்களுக்குக் காண்பிக்க முற்படுகின்றார்களெனில் அது அதன் உண்மைத்தன்மைக்குப் புறம்பானதாகும்.

இந்தப் பின்னணியுடன் இன்றைய சூழலில் உழ்ஹியா, நிகாப் மற்றும் தனியார் சட்ட சீர்திருத்தங்களை நோக்குவது மிக முக்கியமானதாகும். கட்டாயப்படுத்தப்படாத, மாற்றீடுகள் உள்ள, எமது வாழ்வொழுங்கிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாத விடயங்கள் இந்த விவகாரங்களில் இருக்கத்தக்க, அவற்றையெல்லாம் மறைத்து, தமது கருத்துக்களைப் பிடிவாதமாக சாதாரண பொதுமக்களுக்குத் திணிப்பதற்காக மார்க்க உணர்வை உசுப்பேத்தி விடுபவர்களது வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. இவர்கள் பிடிவாதமாகச் சொல்லும் சட்டங்களால் மொத்தப் பாதிப்பையும் எதிர்நோக்கப் போவது சாதாரண மக்களாகிய நாம்தான். மார்க்கம் வாழ்வதற்கேயல்லாமல் சாவதற்கல்ல.

நாம் துன்பங்களுக்கு உட்படும் போது, நாம் இழப்புக்களை எதிர்நோக்கும் போது இவர்கள் எம்முடன் வந்து நிற்கப் போவதில்லை என்பதுதான் வரலாறு. எமது அபலைகள் தெருவுக்குத் தெரு எதிர் நோக்கும் துன்பங்கள் இவர்களுக்கு விளங்கப் போவதில்லை. உடைந்து போகும் குடும்பங்களின் எச்சங்களாக, வடுக்களாக நிற்கும் பிள்ளைகளின் வாழ்வு குறித்த கவலை இவர்களுக்கு இல்லை.

எனவே, பொதுமக்களாகிய நாம்தான் இந்த நெருக்கடியான தருணத்தில் எமது நிலைப்பாடுகள் குறித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். மனிதனுக்காக கொள்கைகள், சட்டங்கள், கிரியைகள், வணக்கங்கள் உள்ளனவே அல்லாமல், அவற்றுக்காக மனிதன் இல்லை. அவை முதற்தரத்தில் மனித நலனைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அவனது நலனை இழக்கச் செய்கின்ற எந்த ஒன்றும், எந்த ஒரு சூழலிலும் இஸ்லாத்தின் போதனையாக இருக்க முடியாது. தடுக்கப்பட்டவற்றிலும் அவனது நலனே கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அவனது நலன் பாதிக்கப்படும் போது தடுக்கப்பட்டதும் ஆகுமாக்கப்படுகிறது. அவனது நலன் பாதிக்கப்படும் போது ஆகுமாக்கப்பட்டதும் தடுக்கப்படுகிறது.

அவனுக்கு நலனுள்ளதாக செய்யுமாறு ஏவப்பட்ட ஒன்றினால் அதற்கு மாற்றமான பாதக விளைவு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகின்ற ஒன்றும் கூட குறித்த அந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. தொழுகை இதற்கு மிகப் பெரும் உதாரணம். இதற்கு அப்பால் இதற்கு உதாரணம் சொல்ல அவசியமில்லை. தொழுகையே அப்படியிருக்க முடிந்த முடிவுகளாக கடமையாக்கப்படாத அம்சங்களில் ஒரு கருத்தை இந்த நெருக்கடியான சூழலில் பிழையான வழிமுறைகளைக் கையாண்டு உண்மைக்குப் புறம்பாக வலியுறுத்தல் கருத்துப் பயங்கரவாதமாகும். இது மிகவும் ஆபத்தானதாகும்.

மக்களே! நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும். எமக்கு முன்னால் பல நாடுகளின் வரலாறுகள் படிப்பினைகளாக உள்ளன. வெறும் உசுப்பேத்தல்களின் பின்னால் மந்தைகளாகப் போய் கசாப்புக் கடையில் மாட்டிக் கொள்வதா? அல்லது கௌரவமாக வாழ்ந்து, எந்த சூழலிலும் எவருக்கும் தலை சாய்க்காமல் இருப்பதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அனைத்தையும் விட மார்க்கத்தின் பெயரால் உசுப்பேத்தல்தான் இந்த உலகில் மிகவும் இலகுவானது... ஆனால், அதன் விளைவுகளோ மிகவும் பாரதூரமானது. அல்லாஹ்வின் இருப்பையே பகுத்தறிவைக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் குறித்து சிந்தித்து ஏற்குமாறு சொல்லியிருக்க... சாதாரணமான விவகாரங்களைக் கண்களை மூடிக் கொண்டு ஏற்குமாறு இறைவன் ஒரு போதுமே கட்டளையிட்டு இருக்கமாட்டான்.
சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது
நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா??
By: Ikram Nazir Naleemi.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.