Articles

உளநோய்களையும் குர்பானி கொடுப்போம்

- ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

அமல்களில் உயர்ந்தவை உள்ளம் சார்ந்த அமல்களாகும். ஈமான், தக்வா, இஹ்லாஸ், தவக்குல் இதற்கு சில உதாரணங்களாகும். அதேபோல் குப்ர், நிபாக், முகஸ்துதி, கர்வம் போன்ற உள்ளம் சார்ந்த பண்புகள் தீய பாவங்களாகும்.

உடலுறுப்புக்களால் செய்யப்படும் அமல்களை விட உள்ளம் சார்ந்த செயற்பாடுகளுக்கே இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஏனெனில் உள்ளத்தில் இருந்தே செயல்களுக்கான தூண்டுதல் பிறக்கின்றது. உள்ளம் பரிசுத்தமானதாக இருந்தால் நல்ல எண்ணங்கள் தோன்றும். அதன் விளைவால் பயனுள்ள செயல்கள் பிறக்கும். அது கெட்டுப் போய்விட்டால் துர்க்குணங்களே வாழ்வை வடிவமைக்கும்.

இவ்வகையில் வணக்க வழிபாடுகளின் மூலமாக உள்ளங்களை சீர்படுத்துவதை இஸ்லாம் பிரதான நோக்கமாகக் கருதுகின்றது. தொழுகையின் மூலம் பாவங்களை விரும்பும் மனநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. ஸகாத் கொடுப்பதனால் ஏழைகள் மீது அன்பு காட்டும் உள்ளம் வளர்கின்றது.

நோன்பின் பிரதான நோக்கமே தக்வா எனும் பக்குவத்தை ஏற்படுத்துவது. ஹஜ்ஜின் நோக்கங்களும் உள்ளத்தில் நல்ல பண்புகளை விதைத்து, அதில் காணப்படும் தீய பண்புகளை விட்டும் அதனை சுத்தம் செய்வதாகும். முஸ்லிம் சமூகம் ஒரு உள்ளத்தை ஒத்தவர்கள் என்ற ஆழ்ந்த கருத்தை நடைமுறையில் பிரதிபலித்துக் காட்டும் கடமையாக ஹஜ் காணப்படுகின்றது.

மனோ இச்சைக்கு கட்டுப்படாமல் வாழுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய சட்டங்களின் பொது நோக்கங்களாக மார்க்கம், உயிர், பரம்பரை, அறிவு, செல்வம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் என இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

நீதியை நிலைநாட்டல், மனிதன் தன் மனோஇச்சைக்கு கட்டுப்படாதிருத்தல் என்பதும் ஷரீஆவின் மொத்த இலக்குகளில் உள்ளதென இமாம் ஷாதிபி (ரஹ்) குறிப்பிடுகின்றார். சூபித்துவ கிரியைகளின் பிரதான நோக்கமே மனிதன் தன் இச்சைக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதாகும். இதனையே ஆரம்பகால இமாம்கள் 'ஜிஹாதுல் அக்பர் - மிகப் பெரிய ஜிஹாத்' என கூறினார்கள்.

உண்மையில் உளப் போராட்டத்தில் தோற்றுப் போனவன் ஏனைய போராட்டங்களில் வெற்றிபெற முடியாது. எனவே நாம் போராட வேண்டிய முதல் இடம் எமது உள்ளங்களே. அதற்குள் மறைந்திருக்கும் எமது இச்சைகளே.

பழிவாங்கல், குரோதம், காழ்ப்புணர்ச்சி, விட்டுக் கொடுக்காமை, பதவி மோகம், தப்பெண்ணம், மன்னிக்காமை, அடுத்தவனுக்கு தீங்கை விரும்புவது போன்றன தீய குணங்களாகும். இவற்றிலிருந்து உள்ளம் தூய்மையடைய வேண்டும். இத்தீய பண்புகள் உள்ளத்தில் வாழும் போது இபாதத்களின் சுவையை அனுபவிக்க முடியாது. பிறருக்கு உதவும் எண்ணம் வளராது. 'உங்களில் சிறந்தவர் பிறருக்கு பயனுள்ளவரே' என்ற நபிவாக்கை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

இதனால் தான் மனோஇச்சைக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. 'எவர் தனது இரட்சகன் முன்னால் நிறுத்தப்படுவதை அஞ்சி, மனோஇச்சையை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்கின்றாரோ நிச்சயமாக அவர் தங்குமிடம் சுவனமாகும்' (நாஸிஆத்:40-41).

'எவனது உள்ளத்தில் மனோஇச்சை மிகைத்துவிடுமோ அவன் தீய விடயங்களை நல்ல காரியங்களாகப் பார்க்க முற்படுவார்'. ஏன அப்துல்லாஹ் பின் அவ்ன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அலி இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களின் பின்வரும் கூற்று இக்கருத்தை இன்னும் தெளிவுபடுத்துகிறது 'நான் உங்களுக்கு இரண்டு விடயங்கள் சம்பந்தமாக அதிகமாக பயப்படுகின்றேன். நீண்ட எதிர்பார்ப்பு. மனோ இச்சைக்கு கட்டுப்படல். நீண்ட எதிர்பார்ப்பு மறுமையை மறக்கச் செய்யும். மனோ இச்சையைப் பின்பற்றுவது சத்தியத்தை தடுக்கும்'.

இது துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள். பல சிறப்புக்களைக் கொண்ட இந்நாட்களில் அதிகமான அமல்கள் செய்வது வலியுறுத்தப்பட்டுள்ளது. உழ்ஹிய்யா கொடுப்பது இதில் ஒன்றே. இதனை வசதியுள்ளவர்கள் செய்யுமாறு இஸ்லாம் போதிக்கின்றது.

இன்று உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பில் சமூக மட்டத்தில் பல கோணங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் வசதி உள்ள நிலையிலும் ஸஹாபாக்களில் சிலர் உழ்ஹிய்யா கொடுக்காமல் தவிர்ந்தும் இருந்தார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இது தொடர்பில் ஊர் தலைமை நிலைமைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பது பொறுத்தமானது.

ஆனால் உள்ளத்தில் நோய்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். உள்ளம் சீராக இல்லாத நிலையில் செய்யப்படும் அமல்கள் அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வகையில் மனோஇச்சை பாரதூரமான ஒரு உளநோயாகும். இதனை விட்டும் தூரமாகி வாழுமாறு இஸ்லாம் அனைவரையும் பணிக்கின்றது. இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய அம்சமாகும். அறுத்துப் பலியிடுவது ஒரு சிலருக்கே செய்ய முடியுமான வணக்கமாகும். ஆனால் உள்ளத்தில் காணப்படும் தீய எண்ணங்களுடன் போராடுவது நாம் ஒவ்வொருவரும் செய்யக் கடமைப்பட்ட அம்சமாகும்.

அனைத்து ஹாஜிகளும் அரபா மைதானத்தில் ஒரே ஆடையுடன் ஒன்று கூடுகின்றனர். அங்கு அல்லாஹ்விடம் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கின்றனர். ஜம்ராக்களில் ஹாஜிகள் ஷைத்தானுக்கு கல்லெரிகின்றனர். தலைமுடியை சிறைத்து, குர்பானி கொடுத்து பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இவற்றின் மூலமாக இஸ்லாம் எதிர்பார்ப்பது என்ன?.?

எமது உள்ளத்தில் காணப்படும் ஷைத்தானிய பண்புகளுக்கு நாம் கல்லெரிந்தோமா? உம்மத்தின் ஐக்கியத்தை முற்படுத்தி நாம் விட்டுக் கொடுத்து வாழ்கின்றோமா? அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து எமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றோமா? இதுவே ஹஜ்ஜின் கிரியைகள் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பிரதானமான பாடங்களாகும்.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.