Articles

திசை மாறும் அறிஞர்கள் அறிவுக்கு நெருப்பு வேலி.

கொந்தளிக்கும் கடலில் இலங்கை முஸ்லிம் சமூகம் பயணிக்கிறது. வழிகாட்டும் அறிஞர்கள் சட்ட மன்றத்தின் கருவறையில் அறியாமை சூல் கொண்டுள்ளதாக பொதுக் கருத்து நிலவுகிறது. அது உண்மையும் கூட. எதில் வழிகாட்ட வேண்டுமோ அந்த விடயத்தை புறந்தள்ளிவிட்டு வேறு விடயங்களில் கூடுதல் கரிசனை காட்டுவதையும் அவதானிக்க முடிகிறது.

நாடு கொந்தளிப்பான நிலையில் இருக்கும் போது அறிஞர்கள் சீர்கெட்டுப் போனால் சமூகம் குட்டிச் சுவராகும். இந்நிலையில் குர்ஆனிய வழிகாட்டல்களையும் சுன்னாவின் போதனைகளையும் கடைப்பிடித்து சமூக ஒற்றுமைக்காக நடவடிக்கை எடுப்பதே தற்போதுள்ள முதன்மை தேவையாகும். பதிலாக சட்ட மன்றம் மக்களுக்கு நெருப்பு வேலியாக அமையக் கூடாது.

இதுபோன்ற நெறுக்கடியான நேரங்களில், தாம் சார்ந்துள்ள சிந்தனை முகாம்களின் வட்டத்தின் நிழலில் நின்று பிரச்சினையை அணுகாமல் சத்தியம்-அசத்தியம், நீதி-நேர்மை, நன்மை-தீமை, உண்மை-பொய் சமூக எழுச்சி-வீழ்ச்சி, சமூக நலன்கள் என்ற விரிந்த அடிப்படையில் நின்று நிதானமாக பிரச்சினைகளை நிறுத்துப் பார்க்கும் போது தான் சரியான நிலைப்பபாடுகள் பக்கம் சார்ந்து பயணிக்க முடியும்.

     நுணுக்கமும், சாணக்கியமும் இல்லாத அரசியல் தீர்மானங்கள், முட்டாள் தனமான நிலைப்பாடுகள், கண்மூடித்தனமாக ஒத்தோடும் பழக்கங்கள் யாவும் நிச்சியமாக முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சோதனையே.

     இந்த வேளையில் தறி கெட்ட கிளைகளுக்கு அடிவருடியாக இருக்கும் சீர்கெட்ட உலமாக்கள் சோதனை மேல் சோதனையாகும்.

வேதனையை பங்கு போட வேண்டியவர்கள் மக்களுக்கு சோதனையாகவும் சுமையாகவும் மாறியுள்ளார்கள். சீர்கெட்ட இந்த உலமாக்கள் சமூக எழுச்சிப் பயணத்தில் பேரணர்த்தம் மட்டுமல்ல தோல்வியின் நிழலாகவே மதிக்கப்படுகின்றனர்.

     முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துணிமணி இத்துப் போவது போல் சிலரின் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களும் இத்துப்போகும். அவர்கள் அதனை ஓதுவர்கள். ஆனால் அதற்கு சுவை இருக்காது. ஓதுவதில் ஆர்வமும் இருக்கமாட்டாது. அவர்கள் செம்மறித் தோல் போர்த்திய ஓநாய் உள்ளம் கொண்டவர்கள். (பசுத் தோல் போர்திய புலிகள்) அவர்களின் செயற்பாட்டுகளுக்கு பின்னால் பேராசைதான் இருக்கும். இறை பயம் இருக்காது. குறைகள் விட்டால் சரிசெய்யலாம் என்பர். தவறுகள் செய்தால் அல்லாஹ்வுக்கு நாம் இணைவைப்பதில்லை எனவே எங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பர்.' (ஆதராம் தீர்மதி 3356, தாரமீ 3251)

     நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நான் எனது சமூகம் குறித்து மிகவமே பயப்படக் கூடிய விடயம் எனக்குப் பிறகு வரும் வழிகெடுக்கும் இமாம்கள் பற்றியேயாகும்.' (ஸில்ஸிலா ஸஹீஹா-அப்லானி (ரஹ்), பா:4, பக்:109)

வழிகெடுக்கும் இமாம்கள், கதீப்மார்கள், தலைவர்கள் அசத்தியத்தை சத்தியமாக கூறும்போது மக்கள் அவர்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பொய்யை உண்மை என ஏற்றுக் கொள்வார்கள். சத்தியம் எது அசத்தியம் எது என தெரியாத நிலையில் பொது மக்கள் தடுமாறுவார்கள். இது சமூகத்தில் தோன்றும் மிகப் பெரிய சாபக்கேடு. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் சர்ந்தர்ப்பவாத அறிஞர்கள் குறித்து மிகவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்

குறிப்பிட்ட சில அறிஞர்கள் குழாம் அனைத்து விவாகரங்களையும் நாமே செய்வோம் என்ற நிலை மாற வேண்டும். துறை சார்ந்தோருக்கு அந்த துறைகளில் இடம் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்று எண்ணுவது கொந்தளிக்கும் கடல் பயணத்தில் அழிவைக் கொண்டுவரும்.

அசட்டுத்தனமான சிந்தனைகளை பரவவிட்டு பின்னர் கைசேதப்படுவதில் அர்த்தமில்லை. கட்டிக் காத்த தலைமைத்துவம் சொந்தங்களின் கைகளாயே இடிக்கப்படும் ஆபத்தை தவிர்ப்போம்.

சிந்தனை சீர்திருத்தம் குறித்து கவனத்தை குவிப்போம். சிந்தனை தீவிர வாதம் பொல்லாதது. நாட்டை, வீட்டை அழிக்கக் கூடியது. வரமுன் காப்பவன் புத்திசாலி. கோழைகளாக செத்து மடிவதற்கு இடம் கொடுக்கமால் நாட்டையும் வீட்டையும் காப்போம்.

"சட்ட வசனங்களை புரிந்து கொள்வதில் குறுகிய பார்வையும் நடைமுறையை புரிந்து கொள்ளாத தீர்ப்புக்களும் ஷரீஆவின் இலக்குகளுக்கு இடம் கொடுக்காமல் சட்ட வசனத்தை நேரடியாக பின்பற்றியமையும் பல பிறழ்வுகளுக்கு இட்டுச் சென்றன. அதன் விளைவால் இன்று உலக முஸ்லிம் உம்மத் பெரும் அவஸ்தைப்படுகிறது" (அறிஞர் பஷீர் ஹஸன்)

இலங்கையின் அறிஞர்களும் அலட்சியப் போக்கில் பயணத்தை தொடர்ந்தால் முதலில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தனைக் சிக்களில் சீரழிவார்கள். இரண்டாவதாக பஷீர் ஹஸன்கள் சுட்டு விரலாக உருவாகுவார்கள். அப்போது சட்ட மன்றம் புனிதமானது என்று பேசி அர்த்தம் கிடையாது.

Muhammed Faqeehuddeen Naleemi

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.