Articles

அழகிய இலங்கை தேசம் அழிவை நோக்கி நகரலாமா?

 

உஸ்தாத் உஸைர் இஸ்லாஹி.
அமீர் -இலங்கை ஜமாஅத்தே இஸலாமி
---------------------------------------------------------------
இலங்கை தீவில் பல நூற்றாண்டு காலமாக உறுதியாக இருந்து வந்த சிங்கள - தமிழ் - முஸ்லிம் சமூக, பொருளாதார, பண்பாட்டு, கலாச்சார உறவுகள் சிதைந்து போனமைக்கான பிரதான காரணங்களாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்ட முடியும்:
01. பூகோள அரசியல் முன்னெடுப்புகள்
02. நாட்டை தொடராக ஆட்சி செய்துவந்த கட்சிகளின் சுயநலப் போக்கு
03. நாட்டின் பன்மைத்துவத்தை சரியாக நிர்வகிப்பதில் சிவில் சமூகம் தோல்வி கண்டமை
04. நாட்டு மக்களின் அரசியல் அறியாமை

“பல மதங்கள்; இரு மொழிகளைக் கொண்ட இலங்கை தேசம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாம் வாழ்ந்த காலத்தில் சிங்கள- தமிழ்- முஸ்லிம் உறவும் ஒற்றுமையும் மேலோங்கியிருந்தது. மட்டுமன்றி, இணைந்த அடிப்படையிலேயே எமது தேசமும் பாதுகாக்கப்பட்டது. இந்த இயல்பான வாழ்வை மீண்டும் மீட்டிக் கொள்வதே எமது தேசத்தின் எழுச்சிக்கான ஒரே பாதையாகும். அந்தப் பாதையும் இன்று மதத் தீவிரவாதம், இனவாதம், விழுமியமற்ற அரசியல் கலாச்சாரம் எனும் செயற்கை பற்றைகளால் மண்டிக் கிடக்கிறது. என்றாலும், எமது நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்தப் பாதையை துப்புரவு செய்தால் எமது நாடு ஆசியாவுக்கு மட்டுமல்ல, அகிலத்துக்கே ஆச்சரியமாக மாறும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

ஒரு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்சியாளர்களின் போக்கும் இயல்புகளும் அந்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு பாடசாலை மாணவன் தனது திறமையை வெற்றிகரமாக வெளிப்படுத்துவதற்கும் அவனது ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும் நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார உறுதிப்பாடுகள் தவிர்க்க முடியாத காரணிகளாக காணப்படுகின்றன. சமகாலத்தில் ஆட்சியில் இருப்போரின் நடத்தை அந்நாட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆட்சியாளர்களின் முடிவுகளே நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கலாச்சார மாறுதல்களை தீர்மானிக்கின்றன.

நவீன அரசியலில் அச்சாணியாக அரசியல் கட்சிகளே தொழிற்படுகின்றன. இன்றைய அரசாங்கங்கள் “கட்சி அரசாங்கங்கள்” என்று அடையாளப்படுத்துவதிலிருந்து அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

“தாம் உடன்படுகின்ற சில குறிப்பிட்ட இலட்சியங்களின் அடிப்படையில் தமது கூட்டு முயற்சிகளினூடாக தேசிய நலனை உயர்த்தும் ஒரு குழுவாக மனிதர்கள் ஒன்று சேர்வதே கட்சி” என எட்மர்ட் பேர்க் (Edmund Burke) குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படையில் தமது தேசத்தின் நலனை நோக்காகக் கொண்ட வித்தியாசமான வழிமுறைகளைக் கொண்ட பல அரசியல் கட்சிகளை வளர்ச்சியடைந்த நாடுகளில் காண முடியும்.

இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து (டொனமூர் யாப்பு - 1931) அரசியல் கட்சிகளின் தோற்றத்தை காண முடியும்.

லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகிய கட்சிகளையே ஆரம்ப கால செல்வாக்குமிக்க தேசிய கட்சிகளாக குறிப்பிட முடியும். இலங்கையில் கட்சிகளின் வயதும் அதனது எண்ணிக்கையும் 100ஐ நெருங்கினாலும் இங்கு காணப்படும் பிரதான கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இனவாத, மதவாத கொள்கைகளை தமது கொள்கைகளாக மாற்றியுள்ளதுடன் அதன் மூலமாகவே அரசியல் தலைவர்கள் ஜனநாயகம் பேச முற்படுவதானது இலங்கையில் ஜனநாயகத்தின் கையாலாகாத நிலையையும் எமது மக்களின் அரசியல் அறியாமையையுமே வெளிப்படுத்துவதோடு இலங்கையின் இன ஐக்கியத்துக்கும் உண்மையான அபிவிருத்திக்கும் பெரும் தடைக் கல்லாக அதுவே இருந்து வருகிறது என்கின்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்ட முடியும்.

லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கம்யூனிச கட்சி போன்றன இடதுசாரி சிந்தனையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற கட்சிகளாகும். ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதையும் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தையும் நோக்காகக் கொண்ட மத சார்பற்ற கட்சியாக தோற்றம் பெற்றது. இவ்விரு கூற்றுக்களும் உண்மையாகிய போதிலும் இன, மத, சிந்தனைகளை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உருவாகி தமது வெற்றியையும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, முன்னைய கட்சிகளும் தமது இருப்புக்கும் வெற்றிக்குமான வழிமுறையாக இன, மத வாதங்களையே எடுத்துக் கொண்டதை காண முடியும்.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் திரு. டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் 1946இல் ஒரு மதச் சார்பற்ற கட்சியாகவே ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. இதனால்தான் இந்தக் கட்சியோடு சிங்கள மஹா சபையும் முஸ்லிம் லீக்கும் இணைந்து கொண்டன. இக்கட்சியினது ஆரம்ப கால முன்னெடுப்புகளும் மதச் சார்பற்ற பண்பை வெளிப்படுத்துபவையாகவே அமைந்திருந்தன. ஆனாலும், 1951இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்தை தொடர்ந்து முன்னைய கட்சிகளின் போக்குகளிலும் மாற்றம் ஏற்பட்டது.

1950களைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், யாப்புத் திருத்தங்கள், யாப்பு மாற்றங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், உணர்வூட்டும் தேர்தல் கால உரைகள், சோல்பரி யாப்பிலிருந்த சிறுபான்மை காப்பீடுகள் நீக்கப்பட்டமை என்பவற்றை பார்க்கும்போது ஒவ்வொரு கட்சியுமே தமது இருப்புக்கும் வெற்றிக்கும் கொடுத்த முக்கியத்துவத்தினை தேசத்தின் வளர்ச்சிக்கும் தேச மக்களின் ஐக்கியத்துக்கும் கொடுக்கவில்லையென்பது புலனாகிறது.

தேசிய கட்சிகளின் சுயநலப் போக்குகளும் இதனால் அடைந்த கசப்பான அனுபவங்களும், ஏமாற்றுகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றின் விளைவாக தோன்றிய பிராந்திய கட்சிகள், சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் என எல்லாமே தமது இருப்புக்கும் வெற்றிக்குமான ஏக வழிமுறையாக இன, மத வாதங்களை மையப்படுத்தியதனால் இன்று முழு நாடும் அதன் மனித வளமும் இனவாத சேற்றில் புதையுண்டு போகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இனத்தையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்ட எமது நாட்டு அரசியல், மொத்தத்தில் முழு நாட்டு மக்களையுமே பூகோள அரசியல் முன்னெடுப்பாளர்களின் அடிமைகளாக ஆக்கி விட்டது. பூகோள அரசியல் முன்னெடுப்பாளர்களும் அதனைப் பயன்படுத்திய எமது நாட்டின் சுயநலமிக்க சில மனிதர்களும் அனுபவித்த, அனுபவித்து வருகின்ற இன்பங்களையும் பயன்பாடுகளையும் நம் நாட்டு பொது மக்களால் அனுபவிக்க முடியாமலேயே போய்விட்டது.

எமது நாட்டில் உருவாக்கப்பட்ட இனப் பிரச்சினைகளால் எமது தேசம் அடைந்த இழப்புகள் ஏராளம். விதிவிலக்கு இல்லாமல் எல்லா இன மக்களும் பிரச்சினைகளை சந்தித்திருக்கின்றோம்; உயிர்களை பலிகொடுத்திருக்கின்றோம்; சொத்துக்களை இழந்திருக்கின்றோம்; சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகியிருக்கின்றோம் என்றால் இங்கு மத வாதத்தையும் இனவாதத்தையும் வளர்க்கும் தேவை யாருக்கு இருக்கின்றது? இதனால் யார் இலாபம் அடைந்தார்கள்? என்ற கேள்வி எழுகின்றது.

இறுதியாகஇ நம் நாட்டில் வாழுகின்ற சகல இனங்களையும் சேர்ந்த மக்களது ஒற்றுமையும் அவர்களது அரசியலும் ஒரு சந்தியில் சந்திக்காமல் எமது நாட்டின் அமைதி, அபிவிருத்தி, ஐக்கியம் எல்லாமே சாத்தியமற்றதாய் போய்விடும். உலகத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் இருக்கின்ற எமது நாடும் எமது நாட்டு மக்களும் சர்வதேச சக்திகளுக்கு முன்னால் பேரம்பேசும் ஒரு சக்தியாக மாற வேண்டுமெனில் எமது சந்திப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே புதிய பார்வை, புதிய நோக்கு என்ற அடிப்படையில் எமது அரசியல் கட்சிகளும் எமது சிவில் சமூகமும் எமது பிரஜைகளும் மாற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.