Articles

இளைஞர் பாராளுமன்றம் ஒரு பார்வை.


இளைய தலைமுறையினர் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தத்தக்கதாகவும், இளைஞர்களது தேவைகளை ஆட்சியதிகாரத்திலுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்வதற்கெனவும், கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு செல்லக்கூடியவாறு, முழுமையாக இளைஞர்களை மட்டும் உள்வாங்கி இளைஞர் கழக நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே இந்த இளைஞர் பாராளுமன்றம்.

நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த, நிறைவான ஆளுமையைக் கொண்ட, ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட நாட்டுப்பற்றுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்,
இன மத அரசியல் பேதங்களின்றி அனைத்து இளைஞர்களும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படத்தக்க விதத்தில் அவர்களிடையே ஒற்றுமையையும், நட்பையும், ஒத்துழைப்பு மனப்பான்மையையும் கட்டி எழுப்புதல்.
தேசிய அபிவிருத்தி பொருளாதார, சமூக தேவைப்பாடுகள் தொடர்பான விளக்கத்தை இளம் சமுத்தாயத்தினருக்குப் பெற்றுக் கொடுத்தல்
சனநாயக வாழ்க்கை முறைக்கு இளைஞர்களை பழக்கப்படுத்துதல் மற்றும் சக இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு முன்னின்று செயற்படல்.

இளைஞர் யுவதிகளது ஆளுமைகளை விருத்தி செய்து அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குதலும் அது தொடர்பாக நேர்மறையாகச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டுதல்.
இளைஞர் யுவதிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு ஊக்குவித்தல் என்பன அவற்றின் நோக்கங்களாகும்.

மொத்தத்தில் இளைஞர்களின் தலைமைகளாக செயற்படுதல் என்பதாகும்!

ஆனபோதும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்போரை தவிர இதனால் பலனடைந்தோர் இன்றுவரை யாருமில்லை, பலனடையும் பொருட்டு சுதந்திரமாக செயற்படும்    அதிகாரம் அவர்களின் பாராளுமன்ற அரசியலமைப்பில் இல்லை  என்பதே உண்மை.


இளைஞர்களின் நேரத்தையும் சக்தியையும் வீண்டிக்கக்கூடிய ,(சிலவேளை) சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு கூட எந்தவித்த்திலும் பயனளிக்காத ஒரு அர்த்தமற்ற தேர்தல் எனலாம்.

தலமைத்துவம் சகவாழ்வு ஒருமைப்பாடு போன்ற கலைச்சொற்களின் மூலம் இளைஞர்களை உள்வாங்கி அவர்களின் கலாச்சார மார்க்க பெறுமானங்களை  இல்லாதொழித்து  மத ஒதுக்கல் ஜனநாயக தாராண்மைவாத  விழுமியங்களின் அடிப்படையில்  வார்த்தெடுக்கும் ஓர் முயற்சியே இது.

இதற்கு உதாரணமாக இளைஞர் சேவை மன்றங்களினால் ஏற்பாடு செய்யப்படும்  பயிற்சிப்பட்டறை , கருத்தரங்குகள்,  போன்றவற்றில் போதிக்கப்படும்  பால் நிலை சமத்துவம் போன்ற  கருத்தியல்களை அவதானிக்கலாம்.

என்னை கேட்டால் “எந்தவித நன்மையுமற்ற இவ்வாறான அர்த்தமற்ற சடங்குளை இளைஞர்கள் புறக்கணிப்பதே உசிதம்” என்பேன்

பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்வதற்காக பிரயாணச் செலவு எனும் பெயரில் கொஞ்சமாக சில்லறை வழங்கப்படுமே தவிர மேலதிகமாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சேவைசெய்ய வேண்டும் என்றாலும் தங்களின் பணத்தினை வாரி இறைத்தே ஏதாவது செய்தாகவேண்டும்.

மற்றப்படி புகழுக்காக பெயருக்கு பின்னால் அடைமொழியொன்றை சொறுகிக்கொள்ள அலைந்து திரியும் பணக்காரன் வீட்டுச் செல்லங்களுக்கு இந்நிலை பதவிகள் பொறுத்தமாகவிருக்கும்.

பட்டதாரிகளின் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசாங்கத்தில்,  இளைஞர் யுவதிகளின் வாழ்வாதார தொழில் பிரச்சனைகளுக்கு எந்தவித திட்டங்களோ இல்லாத தேசத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் மட்டும் ஒரு கேடு.

இதில் நகைப்புக்குரிய சுவாரசியமான விடயம் யாதெனில்.,  கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட 52 நாள் அரசியல் நெருக்கடி, பாராளுமன்ற கலவரங்களின் போது இந்த இளைஞர் பாராளுமன்றத்தினால் அந்த முதியோர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கீழ்வருமாறு அறிவுறுத்தல்கள் ஊடக அறிக்கையாக வழங்கப்பட்டிருந்தது.


நாடாளுமன்ற அமர்வுகளை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பிலும் கருத்துக்களுக்கு எவ்வாறு செவி சாய்த்து மதிப்பளிப்பது என்பது தொடர்பிலும் இளைஞர் நாடாளுமன்றத்தின் அமர்வுகளை பார்வையிட்டு, அதிலிருந்து தேர்ச்சிகளையும் அனுபவங்களையும் கற்றுக்கொள்ளுங்கள் எனவும்,

மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் தாக்குவதும், நாடாளுமன்ற வளாகத்தை கேலிக்குள்ளாக்குவதையும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமையையும், நாட்டின் மதிப்பு மிகுந்த ஆவணமான அரசியலமைப்பை எறிவதும், சபாநாயகர் நாற்காலியை தாக்குவதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களே மறந்துவிட வேண்டாம் என்று ஆதங்கப்படும் விதமான ஓர் ஊடக அறிக்கையை அன்றைய தினம் வழங்கியிருந்தார்கள்.

ஆனபோதும் முதியோர் பாராளுமன்றம் இளைஞர்கள் வசமாகும் வரைக்கும் இந்த தேசத்திற்கு விமோசனமில்லை, இந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தல்களினால் இளைஞர்களுக்கும் பிரயோசனம் இல்லை என்பது மட்டும் உண்மை.

கட்டுரையாளர்:
Feroz Mohamed 
Kattankudy.

tnx - madawala news

About PMNO

0 Comments:

Post a Comment

Powered by Blogger.